கடுமையான கட்டுப்பாடுகளுடன் பிறந்திருக்கும் புத்தாண்டை உலக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் உலகமெங்கும் உள்ள ஆதவன் நேயர்களுக்கு, ஆதவன் குழுமம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
நியூஸிலாந்தில் இலங்கை நேரப்படி நேற்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குகள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.
இதைத் தொடர்ந்து அவுஸ்ரேலியா 2022ஆம் ஆண்டை வரவேற்றது. அங்குள்ள சிட்னி துறைமுகப்பகுதியில் வானத்தை வண்ணயமாக்கும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சிட்னியில் நிகழ்த்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற வாணவேடிக்கை விண்ணில் கண்கவர் வண்ணங்களில் ஜொலித்தன.
லண்டன் மற்றும் பரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், இம்முறை தங்களுடைய பாரம்பரிய வழக்கமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன அல்லது குறைத்துள்ளன.
கொரோனா, ஒமிக்ரோன் திரிபு பரவலை கவனத்தில் கொண்டு பல நாடுகள் மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளன.