அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலவாக்கலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “அக்கரப்பத்தனையில் உள்ள கோயில் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 60, 70 சிலைகள் இனந்தெரியாத நபர்களால் தேசமாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும். இதற்கு முன்னர் லிந்துலை பகுதியில் மாதா கோவிலின் சிலை சேதமாக்கப்பட்டது. தற்போது இந்து கோவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவா இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன என்ற சந்தேகமும் எழுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சிலைகள் திருதப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியில் குழுவொன்று செயற்படுகின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.