அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்மொழிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமது கட்சிக்கு புதிய அரசாங்கத்தை அல்லது அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கம் இல்லை என்றும் தற்போது நிலவும் துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம் அடுத்த வருடத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதே இந்த முக்கியமான தருணத்தில் கட்சியின் பொறுப்பு என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இன்று நிலவும் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் அனைத்தும் நாடு எதிர்கொள்ளும் கடுமையான இக்கட்டான நிலையை தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கங்களை அமைப்பது அல்லது ஆட்சிக்கு வருவது முற்றிலும் வேறு விடயம், இந்தச் சேற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களின் முக்கிய நோக்கம் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.