அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர் ராம் மகேஷை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்திய இழுவைப்படகுகள் தொடர்பிலான பிரச்சினையைப் பற்றி மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள இந்திய தூணைத்தூதரகத்துக்கு வருகைதந்த அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, தலைவர் நிஹால் கலப்பத்தி ஆகியோர் இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர் ராம் மகேஷை சந்தித்து கந்துரையாடினர்.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த மகஜரில், சுமார் ஒரு தசாப்த காலமாக இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு காரணமாக இலங்கையின் வடபகுதி மீன்பிடித் தொழில் முற்றாக சரிவடைந்துள்ளது.
இந்நிலை காரணமாக வடபகுதி சுமார் ஐம்பதாயிரம் மீனவர்களும், அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களான சுமார் இரண்டு இலட்சம் பேரும் முகம்கொடுக்கும் நிலைமை மிகவும் கவலைகரமானதாகும்.
இந்திய மீனவர்களின் செயற்பாட்டினால் இந்நாட்டு மீனவர்களுக்கும், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கும் ஏற்படும் அழிவு நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு அவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத ‘பொட்டம் ரோலிங்’ முறை காரணமாக கடலின் அடிபரப்புச் சூழலுக்கு ஏற்படும் அழிவு பாரியதொன்றாகும். இந்நிலமை காரணமாக இந்நாட்டு மீன்பிடித் துறைக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 1000 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஆகும்.
அத்துடன் கடற் சூழலுக்கு ஏற்படும் அழிவை எடைபோட முடியாது. இவ்விடயம் குறித்து எமது நாட்டு உரிய பொறுப்பு வாய்ந்தோருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறியத் தந்தாலும், கண்டனங்கள், ஆர்பாட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தாலும் ஆக்கபூர்வமான எவ்வித தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமற் சென்றுள்ளது.
இந்நாட்டு வடபகுதி மீன்பிடி தொழிற்துறைக்கும், மீனவர்களுக்கும் ஏற்படுத்தும் இந்த அழிவு தொடர்பாக இந்திய அரசுக்கு எமது கவலையை தெரிவிப்பதோடு இலங்கை மற்றும் இந்திய அரசுக்களின் பொறுப்புவாய்ந்தோர் தலையிட்டு துரிதமாக நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் படி வலியுறுத்துகிறோம் என்றுள்ளது.