மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலக வாழ் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை இறை பக்தியுடன் வெகு விமர்சையாக கொண்டாடும் நாள் இன்றாகும்.
விவசாயம் சார் சமூக கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்து சமூகம், செழிப்பான புத்தாண்டில் தனது முதல் அறுவடையை சூரியபகவானுக்கு பூஜிப்பதை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகின்ற இந்த பண்டிகையானது,பரம்பரை பரம்பரையாக இந்து மக்கள் மிக கௌரவமாகக கொண்டாடி வருகின்ற வைபவமாகும்.
மனிதர்கள்,விலங்குகள் மற்றும் இயற்கையின் மீது அன்பு,கருணை செலுத்துவதை தமது ஒரே நோக்கமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் இந்த பன்டிகை கொண்டாடப்படுகின்றன.
தைப்பொங்கலை மனிதர்களுக்கிடையேயான நட்புறவை வளர்ப்பதற்கான மற்றும் பரஸ்பர புரிதலுக்கான வாய்ப்பாக அறிமுகப்படுத்தலாம். தைப் பொங்கலன்று, வீடுகளும் கோவில்களும் கோலம் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
இந்த கொண்டாட்டத்தின் முக்கிய சடங்கு பொங்கல் சாதம் தயாரிப்பதேயாகும். இது வெளிப்புறத்தில் ஒரு அழகான மண் பானையில் பொங்கப்படும்.
சூரியக் கடவுளுக்கு முதல் பிரசாதம் வழங்குவது சாதாரண வழக்கமாகும். மிக பயபக்தியுடனும் கௌரவத்துடனும் சமைத்த பொங்கல் சாதத்தை அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொண்டு பரஸ்பர சகோதரத்துவம், விருந்தோம்பல், நட்பு மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி இவற்றைக் கொண்டு பேதங்களை நிர்மூலமாக்கக்கூடிய வைபவமே இந்த தைப்பொங்கல் வைபவமாகும்.
அத்தோடு இயற்கையோடு மென்மேலும் நெருங்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில், இயற்கையோடு இணைந்த தைப்பொங்கல் போன்ற கலாச்சார வைபவங்கள் அவசியப்படுகின்றமை நிதர்சனமே.
மனித சமூகத்துக்கு இடையில் சுமுகமான தொடர்பை ஏற்படுத்துவதற்கு துணையாக அமைகின்ற இவ்வகையான அற்புதமான வைபவங்களின் முக்கியத்துவம் அற்பமானதல்ல.“ எனத் தெரிவித்துள்ளார்.