அமெரிக்க அதிகாரிகள் நால்வருக்கு சந்தேகத்துரிய நரம்பியல் சார் நோயான ஹவானா சிண்ட்ரம் நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனீவா மற்றும் பரீஸ் நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நான்கு அதிகாரிகளுக்கே இவ்வாறு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று அமெரிக்க அதிகாரிகளுக்கும், பரீஸ் நகரத்தில் ஒரு அதிகாரியும் கடந்த கோடை காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.
இந்த மர்மப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அந்நாட்டின் உட்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
அமெரிக்காவின் எதிரிகள், அந்நாட்டு ராஜ்ஜிய விவகார அதிகாரிகளை மைக்ரோவேவைக் கொண்டு இலக்கு வைக்கப்படுகிறார்களா என்றும் அச்சம் நிலவுகிறது.
முதன்முதலில் கடந்த 2016ஆம் ஆண்டு தான் இந்த ஹவானா சிண்ட்ரோம் கண்டறியப்பட்டது. கியூபாவில் பணியாற்றிவந்த அமெரிக்க தூதர்களுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல், 2018ல் சீனாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஹவானா சிண்ட்ரோம் கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக ரஷ்யா, தஜிகிஸ்தான், ஆஸ்திரிய என பல நாடுகளிலும் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளும், சிஐஏ உளவு அமைப்பினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்டவர்களுக்கு தலைவலி, கடுமையான உடல் சோர்வு, தலை சுற்றல், குமட்டல், தூக்கமின்மை, காது கேளாமை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட தூதரக அதிகாரி ஒருவர் இன்றளவும் செவித்திறன் இயந்திரத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில மருத்துவ அறிக்கைகளின்படி ஹவானா சிண்ட்ரோம் மூலம் நிரந்தர மூளை பாதிப்பும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.