ஜனாதிபதி கனவுடன் உள்ள நாமல் ராஜபக்ஸவின் விளையாட்டுத்துறை தொடர்பான வாக்கெடுப்பின்போது வட, கிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்களை அனுப்பக்கூடிய கழகம் ஒன்றை உருவாக்குமாறு அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தேசிய கபடி போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன், மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்க பொதுச்செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான து.மதன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும், பெண்கள் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் 25 கபடி அணிகள் கலந்துகொண்ட இந்த தேசிய கபடி சுற்றுப்போட்டியிலேயே மட்டக்களப்பு கபடி அணி வீர, வீராங்கணைகள் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
இந்த நிகழ்வின்போது சாதனை படைத்த வீரர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.