ரஷ்யாவின் செயற்பாடுகள் அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய சைபர் நடவடிக்கைகளை கண்காணிக்கும் உளவுத்துறை முகமைகளின் செய்திகளை மேற்கொள்காட்டி வெள்ளை மாளிகை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
அமைதியான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் பெறுவதற்கான முயற்சிகள் மற்றும் ரஷ்ய இணைய செயற்பாட்டாளர்கள் உக்ரைனின் முக்கிய அரசாங்க முகவர் வலைத்தளங்களை முடக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.
மிக முக்கியமாக உக்ரைன் படையெடுப்பை நியாயப்படுத்த ரஷ்யா ‘பொய்-கொடி’ நடவடிக்கையை திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
அதாவது, உக்ரைன் மீது படையெடுக்க சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன் எல்லையில் மால்டோவா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு படையினர் மீது ரஷ்ய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்காக ரஷ்யா ஏற்கனவே உக்ரேனில் நாசகாரர்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது, இந்த தாக்குதல் வரும் மாதத்தில் தொடங்கலாம் என்று வொஷிங்டன் கூறுகிறது.
இதனிடையே ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரேனிய போராளிகளுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குமா என்பதை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர். ஆனால் இப்போது அவர்கள் அத்தகைய திட்டம் பரிசீலனையில் இருப்பதாக ரஷ்யர்களுக்கு சமிக்ஞை செய்கிறார்கள்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்வட்ட உறுப்பினர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார தடைகளை விதித்து எந்தவொரு இராணுவ ஊடுருவலுக்கும் பதிலடி கொடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஆனால் அது மேற்கு நாடுகளுக்கு எதிராக மாஸ்கோவின் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தூண்டலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.
ஐரோப்பாவிற்கு எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ரஷ்யா விளங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
புடின் உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யப் படைகளுக்கு எதிராக கொரில்லாப் போரை நடத்தும் உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து பைடன் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரியும் முன்னாள் அமெரிக்க அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.