டெக்சாஸின் டல்லாஸ் புறநகரில் உள்ள ஜெப ஆலயத்தில் நான்கு பணயக்கைதிகளை சிறைபிடித்த நபர், 44 வயதான பிரித்தானிய குடிமகன் மாலிக் பைசல் அக்ரம் என அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை நிறுவனமான எப்.பி.ஐ. ஆல் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் (சனிக்கிழமை) கோலிவில்லில் காலை சேவைக்கு இடையூறு விளைவித்த மாலிக் பைசல் அக்ரம், பொலிஸாருடனான 10 மணிநேர மோதலுக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்பிறகு பெத் இஸ்ரேல் சபையில் இருந்த பணயக்கைதிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைன், இந்த சம்பவம் பயங்கரவாத செயல் என்று அழைத்தார், மேலும் இந்த தாக்குதலுக்கு பிரித்தானியா கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், இதை பயங்கரவாதம் மற்றும் யூத-விரோத செயல் என்று விபரித்தார், மேலும் வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு எதிராக எங்கள் குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் அமெரிக்காவுடன் நிற்கிறோம்’ என கூறினார்.
மற்றவர்கள் சம்பந்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்று டல்லாஸில் உள்ள எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
தாக்குதல்தாரியின் உடலில் வெடிகுண்டு எதுவும் காணப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் சட்ட அமுலாக்கத்தால் சுடப்பட்டாரா அல்லது தானாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாரா என்ற கேள்விக்கு எப்.பி.ஐ. பதிலளிக்கவில்லை.
அத்துடன், ஏதேனும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்தும் பொலிஸார் கருத்து தெரிவிக்கவில்லை.
பணயக்கைதிகளின் பெயரையோ அல்லது பணயக்கைதிகளின் வயதையோ அதிகாரிகள் வெளியிடவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் பெரியவர்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.
டெக்சாஸ் ஆளுனர் கிரெக் அபோட், இரவு 9:30 மணியளவில் தனது டுவீட் பதிவில், சபையின் குருக்கள் உட்பட அனைத்து பணயக்கைதிகளும் பத்திரமாக இருந்தனர் மற்றும் பலத்த சத்தம் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட பிறகு ஜெப ஆலயத்தை விட்டு வெளியே வந்தனர் என ட்வீட் செய்தார்.
ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளைத் தாக்கி சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 2010ஆம் ஆண்டு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானிய நரம்பியல் விஞ்ஞானி ஆஃபியா சித்திக் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறித்த நபர் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சித்திக் டெக்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏபிசி நியூஸ் முதலில் அந்த நபர் சித்திக்கின் சகோதரர் என்று கூறியது, ஆனால் பின்னர் அவரது சகோதரர் ஹூஸ்டனில் இருப்பதை தெளிவுபடுத்தியது.
பணயக்கைதிகள் நிலைமை முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் அமெரிக்க சட்ட அமுலாக்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான சபை, பணயக்கைதிகள் நிலைமையைக் கண்டனம் செய்தது மற்றும் கோலிவில்லே யூதத் தலைவர்களுடன் ‘சாத்தியமான எந்த உதவியையும் வழங்க’ தொடர்பில் இருப்பதாகக் கூறியது.