எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன.
தாழ்வான தீவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்காக ஒரு விமானம் புறப்பட்டது என நியூஸிலாந்து பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
அத்துடன், சுனாமி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெசிந்தா கூறியுள்ளார்.
டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
டோங்கோ தீவில் வசிக்கும் சுமார் 1,05,000 பேரை அணுக முடியவில்லை. இந்த எரிமலை உமிழ்வு காரணமாக பசிபிக் தீவுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன. டோங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு வசதிகளும் செயற்படவில்லை.
பெரு, சிலி, ஃபிஜி ஆகிய நாடுகளில் ஆக்ரோஷமான சுனாமி அலைகள் தாக்கின.இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக தெற்கு ஜப்பானின் பசிபிக் கடற்கரையை ஒட்டிய தீவுப்பகுதிகளான அமாமி – ஓஷிமா தீவுப் பகுதிகளிலும் சுனாமி அலை உருவானது. கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தன. இருப்பினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சனிக்கிழமையன்று நீருக்கடியில் எரிமலை வெடித்தது. இதைத் தொடர்ந்து 1.2 மீ (4 அடி) அலைகள் டோங்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டோங்காவிலிருந்து சுமார் 2,383 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நியூஸிலாந்தில் இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சத்தமாகவே கேட்டது.
ஹங்கா-டோங்கா ஹங்கா-ஹா’பாய் என்ற இந்த எரிமலையின் வெடிப்பு பல தசாப்தங்களாகப் பிறகு நடக்கும் மிகவும் தீவிரமான ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அங்கு கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவின் சில கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது