ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.
கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாத இறுதியில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என கூறினார்.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழியமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும் என குறிப்பிட்ட சம்பந்தன், அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.