19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரின், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
சென்.கிட்ஸ் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில், இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 175 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, காம்ப்பெல் கெல்லவே 54 ஓட்டங்களையும் வில்லியம் சால்ஸ்மேன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அணித்தலைவர் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும் டிரெவின் மேத்யூ மற்றும் மஹேஷ் பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சதீஷ்ச ராஜபக்ஷ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 37 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அணித்தலைவர் துனித் வெல்லலகே 52 ஓட்டங்களையும் அஞ்சல பண்டார 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டொம் விட்னி மற்றும் ஜோசுவா கார்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வில்லியம் சால்ஸ்மேன் மற்றும் நிவேதன் ராதகிருஸ்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் அசத்திய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் துனித் வெல்லலகே தெரிவுசெய்யப்பட்டார்.