தமது கொள்கைகளை கைவிட்டு கூட்டமைப்பினர் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கொள்கை உரையில் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு முக்கியமான கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில், எந்தவொரு நெறிப்படுத்துதல் சார்ந்த கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தாலும், நீண்ட காலமாக அரசியல் ரீதியான சம உரிமையே தமிழ் மக்கள் கோருவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசியல் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே அன்றி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற, மக்கள் கூட்டமைப்பிற்கு ஆணையை வழங்கவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.