சர்வதேச கல்விப்புலத்தில் அண்மைக் காலமாக கல்வியில் மாணவர்கள் சாதனைகள் படைக்க பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. அந்த வகையில் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் இன்று பிரசித்தி பெற்றுள்ளது. மாணவர்களுடைய பொதுப்பரீட்சைகள் உட்பட அடைவுமட்ட வெற்றிகளைத் தீர்மானிப்பதில் இச்சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் தீர்க்கமான ஒரு காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் ஏற்படுத்தப்படும் கற்றல் தொடர்பான சிந்தனைகள் ஊக்கம் மனவெழுச்சிகள் கற்றலுக்கான உத்திகளைத் தெரிவு செய்து நீடித்திருத்தல், சுய வினைத்திறன் என்பவற்றை உள்ளடக்கிய சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலை மேம்படுத்தவதன் ஊடாக அவர்களின் கல்வி அடைவினை வெகுவாக மேம்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் மாணவர்களிடத்தில் அக ரீதியான தூண்டலை ஏற்படுத்தி கற்றலுக்குத் தடையாகவுள்ள புறக்காரணிகளையும் வெற்றி கொள்ள வழிகாட்டுவிக்கின்றது. இக் கற்றல் செயன்முறை பண்டுரா என்ற அறிஞரின் சமூகக் கற்றல் கொள்கையிலிருந்து தற்போது விருத்தியடைந்துள்ளது.
எமது நாட்டில் பரீட்சைமைய பாட உள்ளடக்கத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம், கற்றல் எவ்வாறு நிகழ்கின்றது. கற்றல் தொடர்பான ஊக்கம், மாணவரது மனவெழுச்சிகள், கற்றல் திறனை மேம்படுத்தல், தொடர்பான விடயங்களுக்கு முக்கியம் கொடுப்பதில்லை. இவையே கற்பதற்குக் கற்றலுக்கான (டுநயசniபெ வழ டுநயசn) தேர்ச்சிகளாகும். வெளிநாட்டுக் கல்வி முறைகளில் இவற்றிற்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இனி நாமும் இவற்றைப் பிரயோகிப்போம் சுய ஒழுங்குமுறை ழச ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் மாணவர்களின் ஞாபகம், கவனம், புலக்காட்சியினூடாக கற்றல் செயன்முறையில் தமது எண்ணங்கள், நடத்தைகள் மனவெழுச்சிகளை முகாமை செய்து வெற்றிகரமாகக் கற்றல் அனுபவங்களை ஒழுங்குபடுத்துதலே சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலாகும். இதில் சுய கட்டுப்பாடும் செல்வாக்குச் செலுத்துகின்றது.
இச் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலுக்கான உத்திகளாக திட்டமிடல், கண்காணித்தல், கட்டுப்படுத்தல், சுயபிரதிபலிப்பு என்பனவாகும். இவை ஏற்கனவேயுள்ள அறிவை புதிய சந்தர்ப்பத்துடன் இணைத்து பொருத்தமுடையதாக்கும். திட்டமிடலானது எப்போது கற்றலை ஆரம்பிப்பது? எங்கே கற்பது? எவ்வாறு கற்பது? எதைக்கற்பது? என்பனவற்றைக் கொண்டிக்கும்.
கண்காணித்தல், என்பது நான் செய்ய எதிர்பார்த்ததைச் செய்தேனா? எனது கவனத்தை மாற்ற முடியுமா? நான் விளங்கிக் கொள்ள வேண்டியதை விளங்கிக் கொள்கின்றேனா? நான் பொருத்தமாகச் சிந்திக்கின்றேனா? ஆகிய விடயங்களாகக் காணப்படும். கட்டுப்பாடானது நான் கற்றலை எவ்வாறு வித்தியாசமாகக் கற்பது? கற்றலில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கின்றேனா? எனக்கு நானே எவ்வாறு ஊக்கமளிப்பது? சிறப்பாகக்கற்க என்ன செய்யலாம்? என்ற விடயங்கள் அடங்குகின்றன.
சுய பிரதிபலித்தலானது, நான் செய்ய எதிர்பார்ப்பவை எல்லாவற்றையும் நிறைவேற்ற முடிகின்றதா? மேலும் சாதனையைப் பெற கற்க முடியுமா? அடுத்த முறை நான் வித்தியாசமாக என்ன செய்யலாம்? நான் விட்ட தவறுகள் எவை? எனது பலம், பலவீனங்கள் என்ன? என்ற இக்காரணிகளுடன் கல்வி இலக்கைத் தீர்மாணித்தல், சூழலைக்கட்டுப்படுத்தல், நேர முகாமைத்துவம், உதவி தேடல், சுய கட்டுப்பாடு, சுய ஊக்கல், கவனத்தைக் கட்டுப்படுத்தல், சுய கணிப்பு, ஞாபகம் என்பவையும் முக்கியமானவையாகவுள்ளன.
சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலை மேற்கொள்ளும் மாணவர்களின் இயல்புகள்,
1. கற்றல் தொடர்பான தகவல்களை ஒழுங்குபடுத்த, உருமாற்ற, விரிவுபடுத்த, புதுப்பிக்கத் தெரிந்தவர்கள்.
2. தமது உள்ளத்தின் செயன்முறைகளை கற்றலுக்காகத் திட்டமிட்டு, கட்டுப்படுத்தி, வழிப்படுத்தி எவ்வாறு கற்றல் இலக்குகளை அடைய முடியும் எனத் தெரிந்தவர்கள்.
3. தமது கற்றல் தொடர்பான இலக்குகளைக் கண்காணிப்பவராக, தாமாகவே ஊக்கப்படுத்துபவராக மனித – பௌதீகவளங்களை முகாமை செய்பவராக கற்றல் தொடர்பான முடிவுகளைச் சரியாக எடுப்பவராக இருப்பார்.
4. எவ்வாறு கற்க வேண்டும் என்பதைத் தெரிந்தவராக, ஊக்கல் சார்ந்த விருத்தி செய்பவராக, உயர் கற்றல் வினைத்திறனுடையவராக தனது சுய சிந்தனையைக் கண்காணித்து பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுடையவர்கள், தமது பலங்களையும், பலவீனங்களையும் அடையாளம் கானும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்.
5. நேரத்தை திட்டமிட்டுக் கட்டுப்படுத்துவதுடன், கற்றல் சூழலை எவ்வாறு உருவாக்கி கட்டமைப்பது என்பதைத் தெரிந்தவர்கள் அத்தோடு பொருத்தமான இடத்தை கற்றலுக்காகக் கண்டறிந்து ஆசிரியர்கள், சக மாணவர்களின் தேவையான உதவிகளை நாடக்கூடியவர்கள், சுதந்திரமாகக் கற்கக் கூடியவர்கள்.
6. கற்றல் உத்திகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதோடு உள்ளக வெளிவாரியான கவனச் சிதறல்களைத் தவிர்த்து, தமது கவனத்தைக் கற்றலின் பால் ஒருமுகப்படுத்தக்கூடியவர்கள்.
இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட மாணவர்கள் கற்றலில் சாதனையைப் படைப்பார்கள், இவ்வாறு மாணவர்களுக்கும் உரிய பயிற்சியை வழங்கி சாதனை மட்டத்தையடையச் செய்யலாம்.
இதற்கு சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளைப் புரிந்திருக்க வேண்டும். இதில் ஊக்கல், உயர் அறிக்கைசார் திறன்கள், கற்றல் உத்திகள் சூழல், என்பனவும் உள்ளன. ஊக்கல் சார்ந்த காரணிகளில் சுயவிரிவாக்கம், உள ஆற்றுப்படுத்தல், வெற்றிக்கான எதிர்பார்ப்பு சுயதிட்டமிடல், கற்றல் அடைவுகளில் ஆர்வம் என்பன உள்ளடங்குகின்றன.
உயர் அறிக்கை சார் திறன் காரணகளாக திட்டமிடல், சுயமதிப்பீடு, சுய கண்காணிப்பு, சுய கற்பித்தல் என்பன உள்ளடங்குகின்றன. கற்றல் உத்திசார்ந்த காரணிகளாக பிரச்சினை தீர்க்கும் நுட்பம், சிந்தனையைத் தயார் செய்தல், சூழ்நிலைகளைப்புரிந்து கொண்டு சாதகமாக்கல், ஞாபகம், நேரமுகாமை சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவை அடங்குகின்றன.
இவற்றோடு மிக முக்கியமாக ஆசிரியரின் முன்மாதிரி மாணவர்கள் ஆசிரியருடனான உயிர்த்துடிப்பான தொடர் பாடல் இடைவினை, பாடத்திட்டமிடல், கற்பித்தல் நுட்பம் மாணவர்களுக்குப் பொருத்தமான பின்னூட்டல்களை வழங்குதல் மாணவர்களை ஊக்கப்படுத்தல் என்ற வகையில் மாணவர்களின் சுய ஊக்கப்படுத்தலில் ஆசிரியர். ஆக்கபூர்வமான தாக்கத்தைச் செலுத்துகின்றார்கள்.
அத்தோடு கற்றலுக்கான நிகழ்ச்சிகள் கவர்ச்சியான சூழல், பொருத்தமான உபகரணங்கள், மாணவர்கள் கற்றலை இலகுபடுத்துகின்றன. ஊக்கப்படுத்தல், சுய வினைத்திறன் உயர்வான மனப்பாங்கு, தன்னம்பிக்கை மத நம்பிக்கை, மென்திறன்கள் மாணவர்களிடம் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் விருத்தியடைய உதவும் காரணகளாகவுள்ளன. இதற்கு எதிரான காரணிகளாக, கவனமின்மை, மனஅழுத்தம், அவநம்பிக்கை ஊக்கமின்மை, அக்கறையின்மை, ஈடுபாடின்மை என்பனவாகும்.
இவற்றுடன் பெற்றோர்களுடைய பொருத்தமான மனப்பாங்கு மற்றும் ஒத்துழைப்பு மாணவர்களின் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலை மேம்படுத்தும் முக்கிய காரணியாகவுள்ளன.
இம் முக்கியமான சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலை மாணவரிடத்தே விரிவடையச் செய்ய ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் முக்கியமானவையாகவுள்ளன.
சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலில்
ஆசிரியரின் வகிபாகம்
1. மாணவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் இனம் கண்டு சுய மதிப்பீட்டு உத்திகளைப் பயன்படுத்த வழிகாட்டல்.
2. சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் தொடர்பான தேர்ச்சிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் கற்றல் – கற்பித்தல் தொடர்பாக தமது அறிவைப் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.
4. சுய மதிப்பீட்டின் கூறுகளை மாணவர்கள் அறிய ஊக்கமளிக்க வேண்டும்.
5. சுதந்திரமான ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலினைப் பயன்படுத்த மாணவர்களுக்கு வழிகாட்டல் சுயாதீனமாக அவர்கள் இயங்கிக் கற்க பயிற்சிகளை வழங்குதல்.
6. மாணவர்களின் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலுக்குப் பெற்றோர்கள், சமூக ஒத்துழைப்பையும் பின்னூட்டலையும் பெறச் செயற்படல்.
7. பிரதிபலித்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடல்
மேற்கூறப்பட்டபடி இன்றைய ஒவ்வொரு ஆசிரியரும் தமது சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் திறனை வளர்ப்பதோடு, இலக்குகளைத் தயாரித்தல் திட்டமிடல், சுய ஊக்கல் சுய கண்காணிப்பு, சுயகட்டுப்பாடு, கவனத்தைக் கட்டுப்படுத்தல் நெகிழ்வுத் தன்மை, சுய விரிவாக்கம், சுய கற்பித்தல், பிரச்சினை தீர்க்கும் நுட்பம், சூழலைப் கட்டுப்படுத்தல், நேரமுகாமை தனியாள் பொறுப்புக்கூறல், சுய அவதானிப்பு போன்று சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் – கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தல், பயிற்சி அளித்தல் தேர்ச்சி ஆசிரியருக்கு அவசியமாகவுள்ளது. மேலும் மாணவர்களின் கற்றல் தொடர்பான ஊக்கலை முகாமை செய்வதற்காக பொருத்தமான உத்திகளை ஆசிரியர் பிரயோகிக்க வேண்டும்.
இவ்வகையில் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றல் திறனுள்ள மாணவர்களிடம் சிறந்த கற்றல் அடைவை ஏற்படுத்துகின்றது என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து வயதிலிருந்தே மாணவர்களிடம் சுய ஒழுங்குபடுத்தப்பட்ட கற்றலுக்கான ஆயத்தம் ஆரம்பமாகின்றது. ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வியில் இக் கற்றலுக்கான முறையான தேர்ச்சிகளையும் பயில்வுகளையும் மாணவர்களுக்கு வழங்குதல் இன்றைய காலத்திற்குத் தேவையாகவுள்ளது.
அறிவைக் கட்டுமானம் செய்து ஞாபகத்தில் நிறுத்திக் கொள்ள அறிகைசார் உத்திகளையும், சுய ஊக்குவிப்பு மூலம் தனது விவேகத்தின் பயன்பாடுகளையும், திட்டமிடல் கண்காணித்தல் போன்ற உயர் அறிவுசார் தேர்ச்சிகளையும் இலாவகமாகப் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் சுய ஒழுங்குமுறைக்கற்றலில் ஈடுபடும் பிள்ளையிடம் காணப்படும் விசேட இயல்பாக உள்ளது. எனவே எமது பாடசாலை அதிபர், ஆசிரியர் கல்வியியலாலர்கள் சுய ஒழுங்குமுறைக் கற்றலை மாணவர்களிடையே ஊக்குவித்து கல்வித்துறையில் சிறந்த பெறுபேறுகளுக்கு வழி செய்யலாம். இவ்விடயம் தொடர்பாகப் பெற்றோர்களுக்கும் பொருத்தமான விழிப்புணர்வுகளையும் விரைவாக ஏற்படுத்த வேண்டியுள்ளது.