வேடசந்தூர் அருகே உள்ள கோட்டூரில், ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபடும் பாரம்பரிய விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் ஒவ்வோர் ஆண்டும், தை மாதம் பவுர்ணமி அன்று கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து அன்று பௌர்ணமி நிலவில் இரவு முழுவதும் வழிபாடு நடத்திவருவது வழக்கம்.
இந்த ஆண்டு தை மாதம் பௌர்ணமி நாளான நேற்று இரவு நிலாப்பெண் வழிபாடு கொண்டாட ஏற்பாடுகள் செய்தனர். முன்னதாகஒரு வாரத்திற்கு முன்பே, ஊரில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதிப்போட்டு பெரியோர்கள் முன்னிலையில் குலுக்கள் முறையில் நிலாப்பெண்ணை தேர்வு செய்கின்றனர்.
இந்த ஆண்டு நிலாப்பெண்ணாக கோட்டூரை சேர்ந்த விவசாயி மூர்த்தி – மகாலட்சுமி தம்பதியினரின் மகள் ஜியாஸ்ரீ
தேர்வு செய்யப்பட்டார். இவர் அதே ஊரில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார்.
இவருக்கு ஒரு வார காலத்திற்கு, அப்பகுதியில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி, அங்குள்ள கோயிலில் வைத்து பால், பழம் உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி, மகிழ்ந்தனர்.
தேர்வு செய்யப்பட்ட சிறுமியை, தாரை தப்பட்டை முழங்க, ஊர் மக்கள் புடை சூழ சரளைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஊர்மக்கள் கூறுகையில், “தை மாதம் பௌர்ணமி நாளில் நிலாப்பெண் வழிபாடு செய்வது, பல நூற்றாண்டுகளாக எங்கள் முன்னோர் காட்டிய வழியில் தொன்று தொட்டு கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழிபாடு நடத்துவதன் மூலம் கிராமத்தில் விவசாயம் செழிக்கும், கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே ஆண்டுதோறும் இரவில் இந்த வழிபாட்டை நடத்தி வருகிறோம்.” என்றனர்.
















