வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதிவாளர் ஜெனரல் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முனசிங்க ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை கையொப்பமிட்ட மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக, ஒவ்வொரு நபரும் தாம் விரும்பும் எந்தவொரு நபரையும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் இருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பெண்ணை தான் திருமணம் செய்துள்ளதாகவும், தனது மனைவி இரட்டை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது குழந்தைகள் தற்போது வெளிநாட்டில் உள்ளவர்கள் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவாளர் ஜெனரலால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறித்த புதிய விதிமுறைகளை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி திஷ்ய வெரகொட இந்த மனுவில் கோரியுள்ளார்.
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு கடந்த 1ஆம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சிற்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில் இந்த புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் வெளிநாட்டவர், கடந்த 6 மாதங்களில் தங்கள் நாட்டில் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், குறித்த வெளிநாட்டவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டாரா, கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளாரா, என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, புற்றுநோய், எச்ஐவி, மலேரியா, சிறுநீரக பாதிப்பு, ஹெபடைடிஸ் பி, சி அல்லது காசநோய் உள்ளதா என இலங்கை அதிகாரிகளிடம் சுய சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சிவில் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், தேவைப்பட்டால் விவகாரத்தினை உறுதி செய்யும் ஆவணம், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் குறிப்பிடும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.