தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர்கள் தமக்கு வழங்கிய ஆணை, அரசாங்கம் பெற்ற ஆணையைவிட மேலானது என நாடாளுமன்ற உறுப்பினார்ட் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இதனை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் ஆணையை மீறி கொள்கையை வெளியில் வைத்துவிட்டு வரத்தயாரில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சியமைத்த இந்த அரசாங்கத்திற்கு கிடைத்த ஆணையை விட தமிழர் தேசத்தை அங்கீகரிக்க தமிழர்கள் கொடுக்க ஆணை 75 வீதத்திற்கும் அதிம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் ஜனாதிபதிக்கு மாற்று சிந்தனையொன்றும், சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் தம்மிடம் இருந்ததாக கூறினார்.
இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை வழங்கியுள்ள நிலையில் அபிவிருத்தி பணிகளுக்காக வடக்கு கிழக்கு பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரசாங்கத்தினாலோ எதிர்கட்சியினாலோ மாற்றமொன்றை உருவாக்க முடியாது என குறிப்பிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெளிவான கொள்கையினை தெரிவிக்காமல் சஜித் பிரேமதாசவினால்கூட தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.