பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அங்கு 3 ஆவது கொவிட் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 4 ஆவது கொவிட் அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது.
கொவிட் பரவலுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறந்த முறையில் செயற்படுவதாக உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றதுடன், பிரான்ஸில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (24) முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கட்டயாமாக தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.