நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சற்று முன்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார பிரச்சினை தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர், எரிசக்தி அமைச்சர், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை சேவையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பில் தற்போதைய மின் நெருக்கடிக்கு தீர்வு காண தீர்வு எட்டப்பட்டதாகவும் லொக்குகே தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் இன்று காலை அறிவித்தது.
நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.