கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு, பூரண தடுப்பூசி செலுத்துகை இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வமின்றி இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர்களுக்கு பல்வேறு நாடுகளில் அபராதம் விதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இத்தாலியில் 50 வயதுக்கு மேற்பட்டவர் பூஸ்டர் தடுப்பூசி பெறாவிட்டால் 100 யூரோ அபராதமாக விதிக்கப்படுகிறது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களிடம் அபராதம் அறவிடப்படுமாயின், அதனை எந்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்பது என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.