குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
கூட்டத் தொடரின் முதல் பகுதி எதிர்வரும் 11ஆம் திகதி வரையும், இரண்டாவது பகுதி மார்ச் 14ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தொடக்க நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.
நாளை காலை 11 மணிக்கு 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.
2ம் திகதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் எம்பிக்கள் அவை மரபை குலைக்கும் வகையிலான செயலில் ஈடுபடக் கூடாது என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல் இரண்டு நாட்களுக்கு கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தியா – சீன எல்லை விவகாரம், கொரோனா இழப்பீடுகள், விவசாயிகள் பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் இதழ் தெரிவித்த புதிய தகவல்களால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், அது குறித்தும் எதிர்க்கட்சியினர் பிரச்சனையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.