அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமாபாத் குடியிருப்பு வீட்டுத் திட்டத்திவிருந்து வெளியேறும் கழிவு நீரினால் தாம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அப்பிரதேச மக்கள் இன்று ( புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை சுபத்திராம விஹாரைக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் அங்கிருந்து சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியாக கல்முனை பிரதேச செயலகத்தை வந்தடைந்ததனர்.
இதனையடுத்து பிரதேச செயலகத்தின் கதவை மூடி, வழிமறித்து தமது சுகாதார பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரி குறித்த இடத்தில் அமர்ந்திருந்தனர். “கழிவு நீரை வைத்து அரசியல் செய்யாதீர்”, “மக்களின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்”, “முறையான கழிவகற்றல் செய்யப்படவேண்டும்”, “மாநகர சபை மௌனம் காப்பது ஏன்?” போன்ற சுலோகங்களை ஏந்தி பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பொதுமக்கள் அங்கிருந்து செல்லவில்லை.
மாநகர சபை முதல்வர், சுகாதார தரப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்துக்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர், கல்முனை தெற்கு மற்றும் வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சுமுகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த கழிவுநீரை உடனடியாக கல்முனை மாநகர சபையின் உதவியைக் கொண்டு அப்புறப்படுத்துவது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடி நிரந்தரத் தீர்வை பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளவில்லை தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதேச செயலக வளாகத்துக்குள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதுடன் குறித்த வீதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்பட்டன.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன், கல்முனை ஸ்ரீ சுபத்திரா விகாராதிபதி ரன்முதுகல தேரர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் இந்த பிரச்சினை தொடர்பில் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டனர்.