சிரியாவில் ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் முன்னிருந்த ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.
அமெரிக்க படையினரின் ராணுவ நடவடிக்கையின் கடைசி கட்டத்தில், குரேஷி ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னையும் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் மாய்த்துக் கொண்ட செயல், கோழைத்தன விரக்தியின் அடையாளம். இந்த நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க துருப்புக்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர்.
நேற்று இரவு எனது வழிகாட்டுதலின் பேரில், வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் அமெரிக்க மக்களையும் நமது நட்பு நாடுகளை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
எங்களின் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல் குரேஷி என்ற ஐஎஸ்ஐஎஸ் தலைவரை வீழ்த்தி விட்டு அனைத்து அமெரிக்கர்களும் நடவடிக்கையில் இருந்து பத்திரமாக திரும்பியுள்ளனர். இன்று காலை அமெரிக்க மக்களிடம் விரிவாக நான் பேசுகிறேன். கடவுள் நமது படைகளை பாதுகாக்கட்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கையானது, வடக்கு இட்லிப் மாகாணம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே உள்ள எதிர்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அட்மேஹ் நகரின் புறநகரில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டடத்தை இலக்கு வைத்து நடந்தது.
தாக்குதலுக்குப் பிறகு சம்பவ பகுதியில் 13 பேரின் உடல்கள் கிடைத்ததாக சிரியாவின் மீட்புக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க சிறப்புப் படைகள் தரையில் ஐஎஸ் ஆயுததாரிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும், வாகனங்களில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.