19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரின் ஐந்தாம் இடத்திற்கான போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
ஆன்டிகுவா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இலங்கை கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹசீபுல்லா கான் 136 ஓட்டங்களையும் காசிம் அக்ராம் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களையும் முஹம்மது ஷெஹ்சாத் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மதீஸ பத்திரன 2 விக்கெட்டுகளையும் ரவீன் டி சில்வா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 366 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, 34.2 ஓவர்கள் நிறைவில் 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வினுஜா ரன்புல் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் துனித் வெல்லலகே 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், காசிம் அக்ராம் 5 விக்கெட்டுகளையும் அவாய்ஸ் அலி, ஸீஷான் ஸமீர், அப்பாஸ் அலி மற்றும் மெஹ்ரான் மும்தாஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களையும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் காசிம் அக்ராம் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேபோல உலகக்கிண்ணத் தொடரில் ஏழாவது இடத்தை தென்னாபிரிக்கா அணியும் எட்டாவது இடத்தை பங்களாதேஷ் அணியும் பெற்றுக்கொண்டன.
இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியில், மூன்றாவது இடத்திற்காக ஆப்கானிஸ்தான் அணியும் அவுஸ்ரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.