பெரும் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றன.
இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பப் போவதில்லை என கூறி புறக்கணித்திருந்தன.
ஆனால், மேற்குறித்த நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஸின்ஜியாங்கின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் உய்குர் சிறுபான்மையினரை ஒடுக்கியதில் சீனா இனப்படுகொலை கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்துள்ளது.
ஹொங்கொங்கில் அரசியல் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை மற்றும் சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் பற்றிய கவலைகள் தொடர்பாகவும் முறுகல் நிலை நீடிக்கின்றது.
இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.
1,581 ஆண்கள் மற்றும் 1,290 பெண்கள் அடங்களாக, மொத்தமாக 2,871 வீர, வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். மொத்தமாக 91 நாடுகள் பங்கேற்கின்றன.