நீதித்துறைக்கு மதிப்பளித்து மீனவர்கள் வீதியை மறிக்காது விட்டதைப்போல அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இழுவை மடி தடைச் சட்டத்தினை சரியாக நீதித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி சகல மீனவர்கள் சார்பாகவும் விரைவில் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.
சுப்பர்மடத்தில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் சிறப்பானது. வீதியை மறித்து போராட வேண்டாம் என நீதித்துறை கட்டளையிட்டபோது அதனை மதித்து வீதியை விட்டு விலகினர். நீதித்துறைக்கு மதிப்பளித்த மீனவர்கள் வீதியை மறிக்காது விட்டதைப்போல அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும்.
இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல. தொடர்ச்சியாகப் பல சந்ததிகள் இங்கே தொழில் செய்வதற்கு வளங்கள் இருக்க வேண்டும். எங்களுடைய கடல் சுற்றுச்சூழல் இந்த விதமாக பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என மேலும் தெரிவித்தார்.