இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (திங்கட்கிழமை) புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையை பலப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
மேலும், மீனவர்கள் விவகாரம் குறித்தும், இருதரப்பு பொறிமுறைகளை முன்கூட்டியே மேற்கொள்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸுடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சென்றிருந்தனர்.