சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல. பொத்துவில் பொலிகண்டி ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்களின் சுயரூபம் வெளித்தது.
எமது நாட்டின் அரசாங்கம் கொரோனா அலையின் பலத்த பின்னடைவின் மத்தியிலும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. கடந்த நல்லாட்சி காலத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த அரசாங்கம் சிறப்பாக உள்ளது.
நல்லாட்சி காலத்தில் இனவாதம் தலைதூக்கி சிறுபான்மைக்கு எதிரான அரசாங்கமாக இருந்தது. திருகோணமலை சண்முகா பாடசாலை விடயம் ஆரம்பித்த காலத்தில் இனவாதிகளின் கை ஓங்கியிருந்தது.
ரிசாட், ஹக்கீம், ஹலீம், கபீர் காஸிம், மஹ்ரூப் போன்ற பலரும் அமைச்சர்களாக இருந்தும் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமலே இருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிங்கள் யாரும் அமைச்சரவையில் இல்லை.
ஆனாலும் அவர்களின் காலத்துடன் ஒப்பிடும் போது சிறுபான்மையினருக்கு இந்த அரசாங்கத்தில் பிரச்சினை குறைவாகவே உள்ளது. அவர்களினால் நல்லாட்சி காலத்தில் பூச்சாண்டி காட்டியதை தவிர சமூகத்திற்கு எதையும் சாதிக்க முடியாமலே போனது.
தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள். சம்பந்தன் வீட்டில் புரியாணி சாப்பிடும் ஹக்கீம் நினைத்தால் இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியும்.
நாடுகடந்த டயஸ்போறாக்களின் முகவர்களாக இருக்கும் இவர்களுக்கு சமூகத்தை பற்றிய கவலைகள் இல்லை. பதவிகள் மீதும், பணத்தின் மீதுமே பற்றுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.