பண மோசடியில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற விளையாட்டை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காகவே ஊழியர் சேமலாப நிதியத்திலும் கைவைத்துள்ளது என்றும் இந்த மோசமான செயற்பாட்டினை தொடர்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் நாட்டில் தற்போது 600 – 800 மில்லியன் டொலர் மாத்திரமே இருப்பில் உள்ளது என்றும் இது அடுத்த 3 வாரங்களுக்கான இறக்குமதி செலவிற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அனைத்து விவசாயிகளுக்கும் இலட்சக்கணக்கில் பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டு சிறிய தொகையை நிவாரணங்களை வழங்குகின்றனர் என குற்றம் சாட்டினார்.
இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தரத்தில் உயர்ந்த உரம், கிருமி நாசினி மற்றும் களை நாசினி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு நிச்சயம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
உண்மையில் இலங்கை பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடாக மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். (நன்றி கேசரி)