சிம்பாப்வேயில் ஊதிய பிரச்சினை தொடர்பாக, 90 சதவீத ஆசிரியர்களை அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள போதும், அரசாங்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில், பாடசாலைக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை எச்சரித்திருந்தது.
ஆனால், கடந்த வாரம் புத்தாண்டின் முதல் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டபோது பல ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
சில பாடசாலைகள் ஆசிரியர்களோ மாணவர்களோ இல்லாத நிலையில் முற்றிலுமாக கைவிடப்பட்டன. தலைநகர் ஹராரேயில் உள்ள பாடசாலை வகுப்பறைகள் மற்றும் மைதானங்களில் மாணவர்கள் விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுப் பாடசாலைகளில் பணிபுரியும் சுமார் 140,000 பேரில் 135,000 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதனை தொழிற்சங்கங்கள் கணக்கிட்டுள்ளன.
எனினும், அரசாங்கம் வேலைக்குச் செல்லத் தவறியதற்காக 135,000 ஆசிரியர்களை இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.
இதுகுறித்து சிம்பாப்வேயின் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தகவாஃபிரா சோவ் கூறுகையில், ’90 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வதன் மூலம் அரசாங்கம் பாடசாலைகளை மூடியுள்ளது.
குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர் சுமார் 80 சிம்பாப்வே டொலர்கள் சம்பாதிக்கிறார், நாங்கள் (முன்னாள் ஜனாதிபதி ராபர்ட்) முகாபேயின் கீழ் நாங்கள் சம்பாதித்த 540 அமெரிக்க டொலர் சம்பளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்’ என கூறினார்.
ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஊதிய முரண்பாடு மூன்று ஆண்டுகளுக்கு முந்தையது, அரசாங்கம் அமெரிக்க டாலர்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் இருந்து சிம்பாப்வே டொலர்களுக்கு மாறியது. அதன் மதிப்பு பணவீக்கத்தால் பலவீனமடைந்துள்ளது.
சிம்பாப்வேயில் உள்ள ஆசிரியர்கள் மாதத்திற்கு சராசரியாக 100 சிம்பாப்வே டொலர்கள் சம்பாதிக்கிறார்கள்.