அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை மிரட்டி உண்மைகளை நசுக்கும் முயற்சிகளுக்கு உரிய நேரத்தில் மக்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
கைது தொடர்பான விடயத்தை சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க வெளிப்படுத்தி இருக்கவிட்டால் அவர் வெள்ளை வானில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை நாடு ஒருபோதும் அறிந்திருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களை கைது செய்வதில் பொலிஸாரின் நடத்தை குறித்து கடுமையாக சாடிய கொழும்பு பேராயர், ஷெஹான் மாலக்கவின் கைது பட்டப்பகலில் நடந்த கடத்தல் என்றும் குற்றம் சாட்டினார்.
இத்தகைய செயற்பாடுகள் நாகரீகமற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது என குறிப்பிட்ட கொழும்பு பேராயர், சட்டமா அதிபரும் அரச ஊழியரே அன்றி அரச கைக்கூலி அல்ல என்றும் சாடினார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவர் கடமைப்பட்டுள்ளார்.
ஆனால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கோரி குரல் கொடுப்பவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், சர்வதேசத்திடம் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள தயங்கமாட்டேன் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.