சிவில் செயற்பாட்டாளரான ஷெஹான் மாலக்கவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிணை வழங்கப்பட்டது.
அதன்படி ஷெஹான் மாலக்கவை 15,000/- ரொக்கப் பிணையிலும், தலா 500,000/- இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் அவருக்கு பயணத்தடையும் விதித்து மாளிகாகந்த நீதவான் பிணை உத்தரவை வழங்கியிருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்திற்காக ஷெஹான் மாலக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பாணந்துறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு நீதி கோரும் ஆர்வலர்களில் மாலகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.