ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் ஏனைய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்களை அனுப்புவதாகவும், 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழலின் தீவிரம் மற்றும் உக்ரைன் உடனான எங்களது நட்பு நாடுகளுடனான ஆலோசனைக்கு பின்னர், 7.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்கு தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுதான் கனடா மற்றும் நடப்பு நாடுகள் அளிக்கும் இந்த ஆதரவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.