அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை என்றும் அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு உள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையொன்றின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ‘ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்’ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன்.
எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒருபடி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.
ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.