மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதிச் செயலாளர் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக வரிச் சட்ட மூலத்தை எதிர்த்து விசேட மனுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்தது.
குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்ற தீர்ப்பை கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
2020/2021 ஆம் ஆண்டில் 2 பில்லியனுக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 25% ஒரு முறை மேலதிக வரி விதிக்கும் சட்டமூலம், பெப்ரவரி 22 அன்று அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து EPF, ETF ஆகியவையும் குறித்த வரிக்கு உட்படுத்தப்படும் என நிபுணர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச தரப்பு உறுப்பினர்களால் கவலைகள் வெளியிடப்பட்டன.
இதனை அடுத்து வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட மேலதிக வரிச் சட்டமூலத்தில் இருந்து EPF, ETF மற்றும் 9 பிற நிதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சரவைக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்த்க்கது.