ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி இரவு ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இக்குழுவானது சம்பவம் தொடர்பான அறிக்கைகளை அவதானித்து, விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த சம்பவம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் பொறுப்பற்ற செயலாக உள்ளதோடு, திட்டமிட்டோ அல்லது வேண்டுமென்றோ நடத்தப்பட்ட விடயமல்ல என கிடைத்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சில செயல்களை செய்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து, பணம் மற்றும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிக்கையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருந்திக பெர்னாண்டோவின் மகனும் அவரது நண்பர்களையும் உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வாகனத்தை பயன்படுத்தியமைக்காக, ஒழுக்காற்று நடவடிக்கை வாகனத்துக்குப் பொறுப்பான அரச நிறுவனத்திற்கும், இதனை முன்னுதாரணமாகக்கொண்டு வெளியாருக்கு விடுதி வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைவதைத் தடுக்க முழு பல்கலைக்கழக வளாகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ எந்தவிதமான தலையீட்டையும் செய்யவில்லை என குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை பாரபட்சமின்றி அமுல்படுத்தவும் அவர் வழிவகை செய்துள்ளார். அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என முடிவுசெய்வதாகவும் குழு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.