தற்போதைய இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரிகளையும் அரச உயர் பதவிகளுக்கு நியமித்து தண்டனையில் இருந்து அவர்களை தப்பிக்கவைக்க முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வின் 11வது கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில விதிகளைத் திருத்துவது மற்றும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சில கைதிகளை விடுவிப்பது போன்ற செயல்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கை என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பொறுப்புக்கூறலுக்கு மேலும் தடைகளையும் பின்னடைவையும் கண்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தொடர்ந்து உண்மையும் நீதியும் மறுக்கப்படுகிறது என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு அவர்களின் பதில் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணான வகையில் இருப்பதாகவும், 2021 பெப்ரவரி அறிக்கை மனித உரிமைகளை அச்சுறுத்தும் பல அடிப்படை போக்குகளை அடையாளம் கண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சில இராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளமை குறித்தும் மிச்செல் பச்லெட் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறையை இலங்கை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என்றும் மிச்செல் பச்லெட் குற்றம் சாட்டியுள்ளார்.