ஒரு நாடு ஒரு சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது என இலங்கை தொடர்பான கோர் குழு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த செயலணி அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் பாரபட்சமற்றது என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கையின் நிலைமை தொடர்பாக கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முதல் முயற்சிகளைப் பாராட்டியுள்ள கோர் குழு, 46/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து, வழக்குகளை முழுமையாக விசாரிக்கும் பணியில், காணாமல் போனோர் அலுவலகம் மெதுவான முன்னேற்றம் கண்டு வருவது கவலையளிப்பதாக அறிவித்துள்ளது.
சிவில் சமூகத்தின் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் பற்றி கவலை வெளியிட்டுள்ள கோர் குழு, ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை ஐ.நா. ஆணையாளருடன் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் 46/1 தீர்மானத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் என்றும் கோர் குழு தெரிவித்துள்ளது.