வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூர்த்தி செய்யவில்லை என இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து ஐ.நா சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் இந்தியா, ஜெர்மனி, பிரேஸில், ஜப்பான் உள்ளிட்ட ஜி4 நாடுகள் சார்பில், ஐ.நாவுக்கான ஜப்பான் தூதா் கிமிஹிரோ இஷிகானே மேற்படி குற்றசாட்டினை முன்வைத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ” வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூா்த்தி செய்யவில்லை.
இந்தத் தோல்விகள் அந்தக் கவுன்சிலின் நம்பகத்தன்மையை பல வேளைகளில் குறைத்து வருவதை ஜி4 நாடுகள் கண்டு வருகின்றன. எனவே வீட்டோ அதிகாரம் குறித்து மிகப் பெரிய அளவில் தீவிரமான விவாதங்களை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கொண்டு வந்திருந்தது.
இருப்பினும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்தத் தீா்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது. இதேபோல் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் பல்வேறு சமயங்களில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.