கடவுச்சீட்டு வைத்திருக்கும் உக்ரைனிய அகதிகள் செவ்வாய்கிழமை முதல் பிரித்தானிய விசாவிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்று உட்துறை செயலாளர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவைகளின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உள்துறை செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே, பிரித்தானியாவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சேரக்கூடிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஒன்லைனில் விண்ணப்பிப்பவர்கள், பிரித்தானியாவில் ஒருமுறை கைரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை வழங்க முடியும். கடவுச்சீட்டு இல்லாதவர்கள் மீது விசா விண்ணப்ப மையங்கள் கவனம் செலுத்த அனுமதிக்கும் என்று படேல் கூறினார்.
அகதிகளுக்கான இரண்டாவது திட்டம், உக்ரைனியர்களை பிரித்தானியா வருவதற்கு மக்களும் அமைப்புகளும் நிதியுதவி செய்யும். அது எப்போது தொடங்கும் என்பது பற்றிய கூடுதல் விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதேவேளை, உக்ரைனில் உள்ள பிரித்தானிய தூதரகம் மற்றும் பிரித்தானிய சபையில் பணிபுரியும் அனைத்து உக்ரைனிய ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிரித்தானியாவுக்கு வர முடியும் என்பதை வெளியுறவு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.