இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது, மற்றும் நம்பகமானது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் ஏவுகணை தவறுதலாக விழுந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. நமது ஏவுகணை அமைப்பு மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது” என அவர் கூறியுள்ளார்.
இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்திருந்தது. பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்றுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு அதனை ஏற்க மறுத்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.