கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஆய்வு தகவலை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பாரதி பிரவிண் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில், கொரோனா காலத்தில் 2020 ஆண்டில் 204 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மனச்சோர்வு, கவலை உள்ளிட்ட கோளாறுகளின் உலகலாவிய பரவல் மற்றும் சுமை பற்றி லான்செட் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேசிய மனநல திட்டம் 704 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மனநல திட்டத்தின்கீழ் சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல நிபுணர்களின் சேவைகளை வழங்க 24 மணிநேரமும் செயல்படுகின்ற ஹெல்ப் லைன் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.