சீரழிந்து வரும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி இலங்கைக்கு பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு கனடா பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதனால் மருந்துகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடி காரணமாக கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது.
மின்சாரம் இன்மை, பொருளாதார ஸ்திரமின்மை, சுகாதாரம் உட்பட பொது சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கனடா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த கால தாக்குதல்களின் அடிப்படையில், பயங்கரவாத தாக்குதல்களுக்கான அதிக சாத்தியம் இருப்பதாகவும் கனடா அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என தெரிவித்து பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.