உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா மற்றும் சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்ந்து 25ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க தலைவரகள் இருவரும் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர்
இதன்போது கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ‘தற்போது நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
உலகம் அமைதியாகவோ, நிலையானதாகவோ இல்லை. உக்ரைன் நெருக்கடி நாம் பார்க்க விரும்பும் ஒன்றல்ல. போர்க்களத்தில் சந்திக்கும் நிலைக்கு நாடுகள் வரக்கூடாது என்பதை மீண்டும் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன’ என கூறினார்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடந்ததாக கூறப்படும் இந்த உரையாடலின் போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கைக்கு சீன தரப்பில் என்ன கூறப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.