மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பு மிக்க வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 13 வருடங்களுக்கு பின்னர், மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி, வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 18 தோல்விகளை சந்தித்து வந்த பாகிஸ்தான் மகளிர் அணி, இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மழையினால் ஐந்து மணி நேர தாமதத்திற்கு பிறகு ஆரம்பமான, இந்த 20ஆவது லீக் போட்டியானது, 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பமானது.
ஹெமில்டன்- சிடொன் பார்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய, மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டோடின் 27 ஓட்டங்களையும் டெய்லர் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நிடா டார் 4 விக்கெட்டுகளையும் பாத்திமான சனா, நஸ்ரா சந்து மற்றும் ஒமைமா சொஹைல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 88 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முனிபா அலி 37 ஓட்டங்களையும் ஒமைமா சொஹைல் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அஃபீ பிளெட்சர் மற்றும் ஷகேரா செல்மன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்;டநாயகியாக, பாகிஸ்தான் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிடா டார் தெரிவுசெய்யப்பட்டார்.