யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது இலங்கை எல்லைக்குள் இந்திய இழுவை மடி படகுகளின் வருகை மீளவும் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவகப் பகுதிகளில் இந்திய படகுகள் இலங்கை எல்லைக்குள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா,
தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய துணைத்தூதரிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.