நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது.
குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பானது கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டே இன்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அரசியல் தீர்வு தொடர்பாக கலந்தாலோசிக்கவே நாம் விசேடமாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தோம்.
அரசமைப்பின் ஊடாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அரசமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இது சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தக்கட்டப் பேச்சை கூட்டமைப்புடன் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.
அத்தோடு, எமது அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
இதில் 4 விடயங்களில் இப்போது உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தோம்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இணங்க, இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம்.
மேலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக நீதி அமைச்சரும் நானும் இணைந்து, சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் விளக்கவும் தீர்மானித்துள்ளோம்.
இதனை நாம் அடுத்து சில நாட்களில் மேற்கொள்வோம். அடுத்ததாக காணிப் பிரச்சினை தொடர்பாக பேசினோம்.
அதாவது, வடக்கு- கிழக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்தோடு, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி எனும் பெயரில் இடம்பெறும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
நீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபடுவோருக்கும் இடையூறுகளை விளைவிக்காமல், அவர்களை அதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அதேநேரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாம், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடானது அவர்களுக்கான தீர்வாக அமையாது என்றும் மாறாக இதுதொடர்பாக முழுமையான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
நான்காவது விடயமாக, விசேட நிதித்தொகையொன்றை வடக்கு- கிழக்கு பகுதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை நாட்டுக்குள் ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
எமது இந்தக் கோரிக்கைளை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் இவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் உறுதியளித்துள்ளன.
புதிய அரசமைப்பு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் கோரியுள்ளோம். அதற்கான நடவடிக்கை இன்னும் 2 மாதங்களில் இடம்பெறும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.