பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 115 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.
லாகூர் மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 391 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, உஸ்மான் கவாஜா 91 ஓட்டங்களையும், கேமரூன் கிறீன் 79 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் நவுமான் அலி மற்றும் சஜித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சபீக் 81 ஓட்டங்களையும் அசார் அலி 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் லியோன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 123 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதனால், பாகிஸ்தான் அணிக்கு 351 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஒட்டங்களாக, கவாஜா ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் வோர்னர் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி, நஷீம் ஷா மற்றும் நவுமான் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து 351 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இன்றைய இறுதிநாளில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, இமாம் உல் ஹக் 70 ஓட்டங்களையும் பாபர் அசாம் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் லியோன் 5 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் கேமரூன் கிறீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பெட் கம்மின்ஸ் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவுசெய்யப்பட்டார்.