பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தவில்லை என்றால், அது சுதந்திரத்தை அனுபவிக்கும் என ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் ஜமீல் மக்சூத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மக்சூத் தனது டுவிட்டர் பக்கதில் ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 176ஆவது ஸ்தாபக தினம். ஒக்டோபர் 1947அன்று பாகிஸ்தான் ஒரு பழங்குடியினரின் படையெடுப்பை நடத்தவில்லை என்றால், நமது மாநிலமும் நாமும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். நாங்கள் அமைதியாக ஒன்றிணைவதற்கு உறுதிபூண்டுள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் சட்டப்பூர்வமாக இந்தியாவின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும். 1947 ஒக்டோபரில் பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்ட படையெடுப்பினை நடத்தியதில் இருந்து இந்தப் பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் சட்டவிரோதமாக உள்ளது.
முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் தேசிய தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், காஷ்மீரிகளின் நலனுக்காக ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சித் தலைவரும் மனித உரிமை ஆர்வலருமான சர்தார் சவுகத் அலி சார்பில் கோசங்களை எழுப்பினர்.
அத்துடன், ஜெனிவாவில் உள்ள ‘உடைந்த நாற்காலி’ நினைவுச் சின்னத்தில் காஷ்மீரில் பாகிஸ்தானின் வலுக்கட்டாய ஆக்கிரமிப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மறுப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.
இருப்பினும், பாகிஸ்தானுக்கு சொந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் எந்த இடமும் இல்லை. அது சட்டவிரோதமாக காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை ஆக்கிரமித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.