புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களின் முன்னர் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டடப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீட்கப்பட்ட குறித்த இளைஞன் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் வயது 30 எனும் இளைஞன் கடந்த சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டு இருந்த வேளை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞர் கைகள் கட்டப்பட்ட நிலையில் நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் மீட்கப்பட்டார்
அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனிடம், சிகிச்சையின் பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.